கரோனாவால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு கடனுதவி : காஞ்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, வருமானம் ஈட்டக் கூடிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு கடனுதவி அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:

இவர்களின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய நபர் கரோனாவால் இறந்தால் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சி கழகம் ‘SMILE’ என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தின் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக் கூடிய நபரின் வயது 16 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை கடன் கிடைக்கும். இதில் ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தில் பயன் பெற விரும்புவோர், குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தாட்கோ மூலம் கடனுதவி

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆஷா திட்டத்தில் கரோனா தொற்றால் வருமானம் ஈட்டக் கூடியவர் உயிரிழந்த ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்துக்கு கடனுதவி அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரா.ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்: இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர்களுக்கு ரூ.5 லட்சம் கடனுதவி அளிக்கப்படும். ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். கடனை 6 ஆண்டுகளில் திரும்ப செலுத்தலாம். வயது வரம்பு 18-ல் இருந்து 60-க்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இந்த விதிமுறைகளுக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காஞ்சிபுரம் எல்லப்பா நகரில் உள்ள தாட்கோ அலுவலகத்தை அணுகலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்