அதிகளவு மீன்கள் பிடிபடாததால் தஞ்சை மாவட்ட மீனவர்கள் ஏமாற்றம் :

By செய்திப்பிரிவு

மீன்பிடி தடைக்காலம் முடிந்து தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால், அதிகளவு மீன்கள் பிடிபடாததால் நேற்று காலை ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்.15 -ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த, 60 நாட்கள் தடைக்காலம் ஜூன் 15-ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்த நிலையில், கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால், மேலும் 15 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல் தோட்டம் பகுதி விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமை மட்டுமே மீன்பிடிக்கச் செல்வர். மற்ற நாட்களில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை விசைப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில், மீன்வளத் துறை அனுமதிச் சீட்டு பெற்று, சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம், மல்லிப்பட்டினம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களிலிருந்து 130 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. நேற்று அதிகாலை கரை திரும்பிய மீனவர்கள் தங்களுக்கு போதிய அளவில் மீன், இறால் கிடைக்கவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது என கவலையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசைப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் மல்லிப்பட்டினம் எஸ்.எஸ்.சேக்தாவூத் கூறியது: அரசு வழங்கும் மானிய விலை டீசல் போதுமானதாக இல்லை. மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், போதிய அளவிலான மீன்கள் பிடிபடாமல் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். டீசல் செலவு, வேலையாள் சம்பளம் என அனைத்தையும் கணக்கு பார்த்தால் ஒரு படகுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்