மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவுரை

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை அடுத்த நார்த்தாம்பூண்டி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மக்கள் கைவினை பயிற்சி மையம் மற்றும் தீபம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய முகாமை ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம் மூலம் தொடர்ந்து நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி வரை 18 வயது முதல் 44 வயது உள்ள 1,44,717 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,602 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும், 45 வயதுக்கு மேல் உள்ள 1,37,893 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 37,477 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

தி.மலை மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் 38,317 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். சிறப்பு முகாமில் சுமார் 100 மாற்றுத்திறனாளிகள் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும், நார்த்தாம்பூண்டி கிராமத்தில் உள்ள பகுதி நேர நியாய விலைக் கடையில் பொருட்கள் வழங்கப்படுவது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணன், கோட்டாட்சியர் வெற்றிவேல், வட்டார மருத்துவ அலுவலர் ராஜா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்