திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் எம்எல்ஏ நல்லதம்பி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு, பாதாள சாக்கடை திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட 27, 28 மற்றும் 29-வது வார்டுகளில் பாதாள சாக்கடை இணைப்பு குழாய்களில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் குட்டைப்போல் தேங்கி நிற்பதாகவும், பல்வேறு இடங்களில் குப்பைக்கழிவுகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பியிடம் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, நகராட் சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை சாலை, 27 மற்றும் 28-வது வார்டுகளில் எம்எல்ஏ நல்லதம்பி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதாள சாக்கடை இணைப்பு குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரி செய்து சாலைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளர் சத்தியநாதனிடம் தெரிவித்தார்.

அதேபோல, திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் ஆங்காங்கே கொட்டப்பட்டு வரும் குப்பைக்கழிவுகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும், நாய்கள், பன்றிகள் உள்ளிட்ட கால்நடைகள் கழிவுப்பொருட்களை உண்ண அங்கு குவிந்து வருவதால் பலவிதமான தொந்தரவு ஏற்படுவதுடன் நோய் தொற்று பரவும் நிலை உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் அங்கும் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அங்கு மலைபோல் குவிந்துள்ள குப்பைக்கழிவுகளை 2 நாட்களில் அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்தார். அப்போது, நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் விவேக், குமார் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்