அரசு அனுமதியின்றி கரோனாவுக்கு சிகிச்சை - தனியார் மருத்துவமனையின் உரிமம் நிரந்தர ரத்து :

அரசு அனுமதியின்றி கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்ததாக கடந்த 11-ம் தேதி திருப்பூரில் சீல் வைக்கப்பட்ட தனியார் மருத்துவமனையின் உரிமத்தை நிரந்தரமாக ரத்துசெய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் 15-வேலம்பாளையம் சாமுண்டிபுரம் காந்தி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில் அரசின் அனுமதியின்றி கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் த.கி.பாக்கியலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் கடந்த 11-ம் தேதி தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட ஆய்வில், புகார் உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதிகாரிகள் விசாரணையில், இந்த மருத்துவமனையை ஓய்வு பெற்ற மாநகராட்சி தலைமை மருத்துவரும், மகப்பேறு குழந்தைகள் நலம் மற்றும் பொதுநல மருத்துவருமான ஆர். நீலாம்பாள், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் என்.ஜெகதீசன் ஆகியோர் நடத்தி வந்ததும், வயது மூப்பின் காரணமாக, மருத்துவமனையை காலி செய்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக, நீலாம்பாள் மற்றும் ஜெகதீசன் ஆகியோர், மாவட்ட இணை இயக்குநருக்கு அளித்த விளக்கத்தில் ‘கடந்த மே மாதம், கரோனா தொற்றால் மருத்துவமனைக்கு வரவில்லை. தமிழ்நாடு மருத்துவமனை நிர்வாகசட்டம் 1997-ன்படி மற்றொருவருக்கு சான்றிதழ் அளித்திருந்தோம். அவரிடம் கரோனாதொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என அறிவுறுத்தியும், அதனையும் மீறி, சிகிச்சைஅளித்துள்ளனர்.

சான்றிதழ் ரத்து செய்வது தொடர்பாக கவனக்குறைவாக இருந்து விட்டோம். முறைகேடான சிகிச்சைக்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதையடுத்து, எங்களது சான்றிதழையும் ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தனர்.

இதுதொடர்பாக, திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் த.கி. பாக்கியலட்சுமி கூறும்போது, ‘‘தமிழ்நாடு மருத்துவமனை நிர்வாகச் சட்டம்1997-ன்படி தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டிருந்த சான்றிதழ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்