தென்மாவட்ட ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மதுரை கோட்ட அதிகாரி தெரிவித்தார்.
சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகவும், சவுகரியமாகவும் செல்லப் பெரிதும் விரும்புவது ரயில் பயணத்தை மட்டுமே. இதனால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அதிகமான ரயில்களை இயக்க வேண்டும். அவற்றின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை–சென்னை தேஜஸ் ரயில் மணிக்கு 79 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் 493 கி.மீ. தூரத்தை 6 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது. தற்போதுள்ள ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சென்னை-மதுரை இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தை 130 ஆக உயர்த்த வேண்டும். இதற்காக வளைவுகள், தேவையற்ற லெவல் கிராசிங்களை நீக்குதல், பாலங்கள் அல்லது சுரங்கப் பாதை, தண்டவாளத்தின் இருபுறமும் வேலிகள் அமைத்தல் உள்ளிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டி உள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளைக் கேட்டிருந்தார். இதற்கு மதுரை கோட்ட மூத்த பொறியாளர் முகைதீன் பிச்சை தெரிவித்துள்ள பதில் வருமாறு:
பயணிகள் ரயில்களின் தற்போதைய வேகம்: திருச்சி-திண்டுக்கல்-மதுரை 110 கிமீ, மதுரை-திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி, மதுரை-மானாமதுரை, விருதுநகர்-தென்காசி, புதுக்கோட்டை-மானாமதுரை ஆகிய ஒருவழிப் பாதை வழித்தடங்களுக்கு மணிக்கு 100 கிமீ, வாஞ்சி மணியாச்சி- திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி இருவழிப் பாதை மணிக்கு 95 கிமீ.
திருச்சி-புதுக்கோட்டை, மானாமதுரை-ராமேசுவரம் ஒருவழிப்பாதை, மதுரை-வாஞ்சி மணியாச்சி இருவழிப் பாதை மணிக்கு 90 கிமீ. மானாமதுரை- விருதுநகர் மணிக்கு 80 கிமீ, திண்டுக்கல்-பழநி மணிக்கு 75 கிமீ, பழநி- பொள்ளாச்சி, திருநெல்வேலி- தென்காசி, திருநெல்வேலி- திருச்செந்தூர், புனலூர்- கொல்லம் மணிக்கு 70 கிமீ, செங்கோட்டை-பகவதிபுரம் மணிக்கு 60 கிமீ, பகவதிபுரம்-புனலூர் மணிக்கு 30 கிமீ, மதுரை-போடி பணிகள் இன்னும் முடியவில்லை.
சரக்கு ரயில்கள்
செங்கோட்டை-கொல்லம் வழித்தடத்தில் சரக்கு ரயில் அனுமதிக்கப்படவில்லை. சரக்குடன் செல்லும் ரயில்களுக்கு அனைத்து வழித்தடங்களிலும் அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிமீ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலியாக செல்லும் சரக்கு ரயில்களுக்கு திருநெல்வேலி-திருச்செந்தூர் 60 கிமீ, திருநெல்வேலி-தென்காசி 70 கிமீ, மற்ற அனைத்து வழித்தடங்களிலும் 75 கிமீ வேகம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
வேகம் அதிகரிக்கப்படும் வழித்தடங்கள்: விருதுநகர்-தென்காசி 100-ல் இருந்து 110 கிமீ, மானாமதுரை- விருதுநகர் 80-ல் இருந்து 100 கிமீ, திண்டுக்கல்-பழநி 75-ல் இருந்து 100 கிமீ, திருநெல்வேலி- திருச்செந்தூர், திருநெல்வேலி- தென்காசி, பழனி- பொள்ளாச்சி, புனலூர்- கொல்லம் 70-ல் இருந்து 100 கிமீ வேகத்துக்கு அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணிகள் முடிக்க இலக்கு: திண்டுக்கல்-பொள்ளாச்சி வழித்தடத்தின் வேகத்தை அதிகரிக்க இந்த மாதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி-தென்காசி வழித்தடத்தின் வேகத்தை அதிகரிக்க வரும் செப்டம்பர் மாதம், விருதுநகர்-தென்காசி, திருநெல்வேலி- திருச்செந்தூர் வழித்தடங்களில் வேகத்தை அதிகரிக்க வரும் டிசம்பர் மாதம், புனலூர்-கொல்லம், மானாமதுரை-விருதுநகர் வழித்தடங்களில் வேகத்தை அதிகரிக்க அடுத்த ஆண்டு மார்ச் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், ‘‘சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தின் வேகம் கடந்த வாரம் 130 ஆக அதிகரிக்கப்பட்டது. சென்னை-மதுரை வழித்தடங்களில் 110-ல் இருந்து 130 ஆக மாற்றினால் திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழித்தடங்களில் எதிர்காலத்தில் வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்களும் ஓடும் வாய்ப்பு உருவாகும்’’ என்றார்.
அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அவ்வப்போது ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது வழக்கம். மதுரை கோட்டத்திலும் அந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago