திண்டுக்கல் அருகே ஆற்றில் தேங்கிய நீரில் நீச்சல் பழகியபோது நீரில் மூழ்கி தம்பதி மற்றும் இரு சகோதரிகள் என நான்கு பேர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் உள்ள என்.பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சக்திவேல் (31). இவரது மனைவி அர்ச்சனா (20). சக்திவேலின் அண்ணன் மகள்கள் சத்யபாரதி (11), ஐஸ்வர்யா (14).
அண்ணன் மகள்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க சக்திவேல், அர்ச்சனா ஆகியோர் நேற்று மாலை என்.பாறைப்பட்டி கிராமத்துக்கு வெளியில் உள்ள சந்தனவர்த்தினி ஆற்றுக்குச் சென்றனர். ஆற்றின் ஒரு பகுதியில் பள்ளத்தில் தேங்கிக்கிடந்த தண்ணீரில் சக்திவேல், சிறுமிகள் இருவருக்கும் ஒரே நேரத்தில் நீச்சல் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு சிறுமி நீரில் மூழ்கவே மற்றொரு சிறுமியை விட்டுவிட்டு மூழ்கிய சிறுமியை நீருக்குள் தேடத் தொடங்கினார். அதேநேரத்தில் மற்றொரு சிறுமியும் நீரில் மூழ்கினார். இருவரையும் காப்பாற்ற நீண்டநேரமாக நீருக்குள் தேடினார் சக்திவேல்.
மூவரும் வெளியே வராதநிலையில் கரையில் இருந்த அர்ச்சனா மூவரையும் தேட நீருக்குள் இறங்கினார். ஆழமான பகுதிக்குச் சென்றதால் அவரும் நீரில் மூழ்கினார். ஆனால், அடுத்தடுத்து மூச்சுத்திணறி நால்வரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் உடல்களை மீட்டனர். தம்பதி மற்றும் சகோதரிகள் என நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் என்.பாறைப்பட்டி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago