தென்னை ஓலையில் நோய் தாக்கியதால் - கிருஷ்ணகிரியில் துடைப்பம் உற்பத்தி பாதிப்பு :

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்னை ஓலையில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், துடைப்பம் உற்பத்தி பாதிக்கப்பட்டு கூடுதல் செலவு ஏற்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காவேரிப்பட்டணம், அகரம், சந்தூர், போச்சம்பள்ளி, அரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இதிலிருந்து தேங்காய், கொப்பரை, ஓலையில் உள்ள குச்சிகள் மூலம் துடைப்பம் ஆகியவை தயார் செய்யப்பட்டு, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். குறிப்பாக, தென்னை மரங்களில் இருந்து காய்ந்து விழும் மட்டைகளில் இருந்து ஓலையில் குச்சிகளை தனியே பிரித்து எடுத்து துடைப்பம் கட்டும் வேலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்பை பெற்று வருகின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் துடைப்பம் ஒடிசா, பிஹார், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தென்னையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்குதலால் ஓலைகள் பாதிக்கப்பட்டு, துடைப்பம் உற்பத்தி சரிந்துள்ளது.

இதுதொடர்பாக துடைப்பம் உற்பத்தியாளர்கள் கூறுகையில், இங்கு தென்னை ஓலை பாதிப்பால், கேரளா, கன்னியாகுமரி, மாரண்டள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து ஓலையை வாங்கி துடைப்பம் தயாரிக்கின்றோம். வெளி மாவட்டங்களில் இருந்து ஓலை வாங்குவதால் கூடுதல் செலவாகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுத்து, தென்னையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்குதலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்