திருப்பத்தூர் மாவட்டத்தில் - மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை : ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத் துவ கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், தனியார் தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி சங்கங்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வேண்டுகோள் விடுத் துள்ளார்.

மகளிர் மேம்பாட்டு சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 18 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் நகர ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.13 லட்சம் மதிப்பில் 16 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், மகளிர் மேம்பாட்டு சங்கம் சார்பில் ரூ.1.35 லட்சம் மதிப்பில் 2 ஆக்சிஜன் செறிவூட்டி கள் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

இந்த 18 ஆக்சிஜன் செறிவூட்டிகள் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை மற்றும் கந்திலி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனை களுக்கு பிரித்து வழங்கப்படும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு 40-க்கும் கீழாக சென்றுள்ளது. உயிரிழப்பு சம்பவங்களும் தற்போது இல்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாகவே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் கரோனா சிறப்பு வார்டுகள் மற்றும் சித்தா சிறப்பு சிகிச்சை மையங்கள் காலியாகி வருவது மனநிறைவை ஏற்படுத்துகிறது.

இருப்பினும், கரோனா விதிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். அதற்கான விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு. தேவையான அனைத்து உதவி களையும் அரசே செய்ய வேண்டும் என்பதில்லை. தனியார் தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி மற்றும் லயன்ஸ் சங்கங்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க முன்வர வேண்டும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, திருப்பத் தூர் அச்சக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரமும், நாட்றாம்பள்ளி வட்டத்தைச் சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்து வரும் குண சேகரன் என்பவர் சார்பில் ரூ.1 லட்சத்துக்கான காசோலை ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் நேற்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில், திருப்பத்தூர் அரசு மருத்துவர்கள் அம்பிகா, பால கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி, திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், ரோட்டரி சங்கத்தலைவர் சிவக்குமார், செயலாளர் கோவிந்தராஜன், பெண்கள் மேம்பாட்டு சங்கத் தலைவர் கவிதா, செயலாளர் சுமதி, பெண்கள் மேம்பாட்டு சங்கத்தின் திட்ட மேலாளர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்