திருப்பத்தூர் நகராட்சியில் குடிநீர் கேட்டு - காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் நகராட்சியில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை காந்தி நகர் 4-வது தெருவில் கடந்த 2 ஆண்டுகளாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறி, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் நகராட்சியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வார்டுக்கும் 3 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. எங்கள் தெருவில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப் படவில்லை.

எங்கள் தெருவில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடிநீர் விநியோகம் இல்லாததால் அடுத்த வார்டுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். அங்கும் தண்ணீர் பற்றாக்குறை என்பதால் அப்பகுதி மக்கள் தண்ணீர் வழங்க மறுக்கின்றனர். இதனால், பணம் கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இது குறித்து நகராட்சி அலுவலகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எங்கள் பிரச்சினை தீரவில்லை. எனவே, சீரான குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்" என்றனர்.

பொதுமக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நகராட்சி அதிகாரிகளோ, காவல் துறையினர் அங்கு வராததால் பொறுமை இழந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் விசாரித்தபோது, ‘‘புதுப்பேட்டை காந்தி நகர் 4-வது தெருவுக்கு ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், அப்பகுதி மேடான பகுதி என்பதால் அங்கு தண்ணீர் சீராக செல்லவில்லை. எனவே, அப்பகுதியில் குடிநீர் குழாய்களை மாற்றியமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப் படும். இருப்பினும், பொது மக்கள் தண்ணீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தில் முறையிடும் போதெல்லாம் லாரி அல்லது டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

காந்தி நகர் 4-வது தெருவில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்