தி.மலை அருகே ஏரிக்கரையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற் றிய வருவாய்த் துறை ஊழியர்களை தாக்கிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தி.மலை அடுத்த ஊசாம்பாடி ஏரிக்கரையை ஆக்கிரமித்து இறைச்சி கடைக்கு கொட்டகை அமைக்கப்படுவதாக வருவாய்த் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், துரிஞ்சாபுரம் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம், கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார், கிராம உதவி யாளர்கள் நெடுஞ்செழியன், செல்வி உள்ளிட்டவர்கள் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, ஏரிக்கரையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து கொட்டகை அமைக்கப்படுவது தெரியவந்தது. அதனை தடுத்து நிறுத்தி அகற்றும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த புதுமல்லவாடி கிராமத்தில் வசிக்கும் ரகுநாதன், சக்திவேல் ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வருவாய்த் துறையினரை தடுத்து கட்டையால் தாக்கினர்.
இந்த தாக்குதலில் படுகாய மடைந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்தித்து மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, கோட்டாட்சியர் வெற்றிவேல் ஆகியோர், நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.
பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி கூறும்போது, “நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட கொட்டகையை அகற்ற முயன்ற வருவாய் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை சார்பில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.
இது குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர், ‘நீர்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்துதல் மற்றும் தகாத வார்த்தைகளால் திட்டுதல்’ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரகுநாதன் மற்றும் சக்திவேல் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago