பல்லடம் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய காவலர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்களை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் திருப்பூரும் ஒன்று. இதனால், டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து, பிற மாவட்டங்களில் இருந்து மது வாங்கி வந்து அருந்துகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்தும் மது பாட்டில்கள் மொத்தமாக திருப்பூர் கொண்டுவரப்படுகின்றன. இவற்றில் சிலவற்றை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் - தாராபுரம் சாலை கள்ளிப்பாளையம் சோதனைச்சாவடி பகுதியில் நேற்று முன்தினம் மாலை வந்து கொண்டிருந்த கார், திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. அந்த வாகனத்தில் இரண்டு போலீஸார் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சோதனைச்சாவடியில் இருந்த காமநாயக்கன்பாளையம் போலீஸார், அவர்களை மீட்டு வாகனத்தை சோதனையிட்டனர். அதில் இருந்த 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.
பல்லடம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்துவரும் முத்துசுருளி (39), மங்கலம் காவல்நிலையத்தில் காவலராக இருக்கும் துரைமுருகன் (30) ஆகிய இருவரும் மதுரை சென்று, மதுபாட்டில்கள் வாங்கிகொண்டு திருப்பூர் திரும்பியுள்ளனர். இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து, காரை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, இருவரையும் பணியிடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவிட்டார்.
2015-ம் ஆண்டு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டி பணம் பெற்றது தொடர்பாக இவர்கள் மீது வழக்கு பதிந்து பணியிடைநீக்கம் செய்யட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் வேறொரு சம்பவத்தில் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago