பல்லடம் அருகே வங்கிக் கணக்கை முடக்கியதால் மருத்துவச் செலவுக்கு சிரமப்பட்ட நிலையில் விவசாயி கனகராஜின் மரணத்துக்கு நீதி கேட்டு, கேத்தனூரில் உள்ள தொடர்புடைய வங்கிக் கிளை முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம், பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆட்சியரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகளிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, விவசாயி கனகராஜின் குடும்பத்தினர் மற்றும் விவசாய சங்கத்தின் தலைவர்கள் நேற்று மாலை பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். மேலும், அரசு நிகழ்வில் பங்கேற்க பல்லடம் வந்த, செய்தித் துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதனிடம், அரசின் இழப்பீடு வழங்க விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் ஆட்சியர் சு.வினீத் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கனகராஜின் தந்தை ரெங்கசாமி பெற்ற பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. வங்கி அதிகாரி சுந்தரமூர்த்தி, வேளாண் அலுவலர் குணசுந்தரி ஆகியோர் பணியிட மாறுதல் செய்யப்பட்டு, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். கனகராஜின் குழந்தைகளின் கல்விக்கு அரசு சார்பில் உதவி செய்யப்படும், அவரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் சலுகை திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்படும். இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago