கரோனாவால் பாதிக்கப்படும் - குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு பயிற்சி : கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்டஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப் பினை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:

மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட தீவிர தடுப்பு பணிகளாக கரோனா பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 100-ஆக குறைந்துள்ளது.

இதுவரை 4.16 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 3 லட்சத்து 55 ஆயிரத்து 453 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2562 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.1.72 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கிற்கு, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு தந்ததால், கரோனா நோய் பரவல் குறைந்து வருகிறது. ஊரடங்கிற்கு முன்பு நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 800-ஆக இருந்தது. தடுப்பூசிகள் போடுவதிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் ஆக்சிஜன் தயாரிக்க கூடிய பிளாண்ட் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 2 இடங்களில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

கரோனா விதிமுறைகளை மக்கள் கடுமையாக கடைபிடிக்க வேண்டும். ஒரு வேளை கரோனா 3-வது அலை வந்தால் கூட அதை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. தற்போது குழந்தைகளுக்காக 100 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க, மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி ஓரிரு நாட்களில் அளிக்கப்படு கிறது. கரோனா விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும், இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன், நலப்பணிகள் இணை இயக்குநர் பரமசிவன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்