தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை மரக்கன்றுகள் பராமரிக்கவும் அனுமதிக்க வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்ட பணியாளர்களை மரக்கன்றுகள் பராமரிக்கவும் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தொரவலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிராமியமக்கள் இயக்கம் என்ற பொதுமக்கள் அமைப்பு, கிராமப்புறங்களில் ஏற்கெனவே இருந்த பசுமையை மீட்கும் வகையில், குளக்கரைகளில் பனை விதைகள் விதைத்தல், மரக்கன்றுகள் நடவு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தொரவலூரை சேர்ந்த எம்.எஸ்.சம்பத்குமார் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்தை சந்தித்து மரக்கன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து எம்.எஸ்.சம்பத்குமார் கூறும்போது, "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட பணியாளர்களைக் கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்தல் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடவு செய்யப்படும் மரக்கன்றுகள், முறைப்படி தண்ணீர் விட்டுபராமரிக்கப்படுவதில்லை. இதனால், அவை கருகிவிடுகின்றன. பின்னர்,அதே இடத்தில் மீண்டும் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன. இதைத் தவிர்க்க வேண்டுமென்ற நோக்கில், திருப்பூர் மாவட்டத்தில் நடவு செய்யப்படும் மரக்கன்றுகளை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களைக் கொண்டே பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமங்களில் மலைபோல குவியும் பிளாஸ்டிக் கழிவுகளை கையாளும் வகையில், மாசுபாடு இல்லாத இன்சினரேட்டர் கட்டமைப்புகளை உருவாக்கி தர வேண்டும். குப்பையை சேகரிக்கும் பேட்டரி வண்டிகள் இல்லாத கிராம பஞ்சாயத்துகளுக்கு பேட்டரி வண்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளோம். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இன்சினரேட்டர் கோரிக்கையை மட்டும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஆட்சியர் கூறினார்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்