அவிநாசி அருகே ஒரு கிராமத்தில் மாட்டு இறைச்சி விற்பனை செய்யக்கூடாது எனக்கூறிய வட்டாட்சியரின் முடிவுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதையடுத்து, இதுதொடர்பாக கோட்டாட்சியர் அறிக்கை கேட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வட்டாட்சியராக இருப்பவர் தமிழ்செல்வன். இவர், நேற்று முன்தினம் இரவு அவிநாசி வட்டத்துக்கு உட்பட்ட கானாங்குளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு குறிப்பிட்ட ஒரு மாடு இறைச்சி விற்பனை செய்யும் கடையில் ஆய்வு செய்தபோது, புகார் வந்துள்ளதன்பேரில் இங்கு மாடுகளை வெட்டி இறைச்சிவிற்பனை செய்யக்கூடாது என,கடை உரிமையாளருக்கு வாய்மொழியாக உத்தரவிடும் வீடியோ காட்சிகள் நேற்று சமூக ஊடகங்களில் வைரலாகின. அந்த வீடியோவில் ஆடு, கோழிகளை வெட்ட தடையில்லை, மாடு வெட்டக்கூடாது என வட்டாட்சியர் தமிழ்செல்வன் பேசும் காட்சிகள் பதிவாகியிருந்தன. வட்டாட்சியரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்கவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று உத்தரவிட்டார். அதன் பேரில், ஆட்சியர் மேற்பார்வையிலும், கோட்டாட்சியர் தலைமையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. திருப்பூர் கோட்டாட்சியர் ஜெகநாதனிடம் கேட்டபோது, ‘‘மேற்கண்ட விவகாரம் தொடர்பாக வட்டாட்சியரிடம் அறிக்கை கேட்டுள்ளேன்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago