திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு கரும்பு அரவைக்கு பதிவு செய்யுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவாலங்காட்டில் செயல்பட்டு வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2020-21-ம் ஆண்டு அரவைப் பருவத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 784 டன் கரும்பு அரவை செய்யப்பட்டு, 8.15 சதவீத சர்க்கரை பெறப்பட்டது. இது 2019-20-ல் பெறப்பட்ட சர்க்கரை அளவைக் காட்டிலும் 1.75 சதவீதம் அதிகமாகும்.
இந்நிலையில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2021-22-ம் ஆண்டு அரவைப் பருவத்துக்கு 900 ஹெக்டேர் பரப்பில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் கரும்பு நடவு செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதமும், பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீதமும் அரசு மானியம் வழங்கப்படுகிறது.
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, 2021-22-ம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில் அதிக அளவில் கரும்பு நடவு செய்து, அதிக மகசூல் பெறும் வகையில் இப்போதே பதிவு செய்துகொள்ளலாம்.
நடப்பாண்டு அரவையைத் தொடங்குவதற்காக திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுத்திகரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆகவே, திருவள்ளூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வட்டங்களில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள், சம்பந்தப்பட்ட கரும்பு அலுவலர்களைத் தொடர்புகொண்டு, வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் பதிவு செய்து, ஆலையின் அரவைக்கு கரும்பை அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago