தனியார் கேபிள் டிவி நிறுவனங்களுக்கு சாதகமாக - அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால் நடவடிக்கை : ஆபரேட்டர்களுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

பொதுமக்களின் விருப்பமின்றி ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால் புகார் செய்யலாம் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் பி.என்.தர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பாக ஏற்கெனவே இலவச செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 200-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் ரூ.140 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி என்ற குறைந்த கட்டணத்துடன் ஒளிபரப்பு செய்யப்பட்டு நிறைவான சேவை வழங்கப்படுகிறது. உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சிலர் தங்களது சுய லாபத்திற்காக அரசின் நலத் திட்டத்தினை தடுக்கும் வகையில், இனிமேல் அரசு சிக்னல் வராது என்று தவறான தகவலை தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை வாடிக்கையாளர்களின் விருப்பமின்றி தன்னிச்சையாக மாற்று கின்றனர். அதற்கு பதிலாக தனியார் நிறுவனத்தின் செட்டாப்பாக்ஸ்களை பொருத்தி வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் வரப்பெறுகிறது.

பொதுமக்களோ அல்லது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்களோ, தமிழ்நாடு அரசின் சிக்னல் மற்றும் சேவை குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. எவ்வித தடையுமின்றி அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடர்ந்து செயல்படும். மிகக் குறைந்த சந்தா தொகையில் பொதுமக்களுக்கு தரமான சேவையை அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் மட்டுமே தொடர்ந்து வழங்க இயலும். பிற கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை வழங்கும் நிறுவனங்களால் வழங்க இயலாது. எனவே, பொதுமக்களின் விருப்பமின்றி ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால் துணை மேலாளர், தனி வட்டாட்சியர் அலுவலக கைப்பேசி எண் 9498002597-ல் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் வரப்பெறும் உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்