பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த வெடிவிபத்துகளில் காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 19 பேருக்கு ரூ.28 லட்சம் நிவாரண உதவி விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர். சீனிவாசன் எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், வெம்பக் கோட்டை வட்டத்திலுள்ள மெஸ் மாரியம்மாள் பயர் ஒர்க்ஸில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளும், வெடி விபத்தில் காயமடைந்த 13 பேருக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே முருகனேரி கிராமத்தில் ராஜலெட்சுமி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் வாரிசுதாரருக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையும், காயமடைந்த ஒருவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டன. மொத்தம் 19 பேருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.28 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சர்கள் வழங்கினர்.
இது தவிர, தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மனஉளைச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அருகில் புதிதாக ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago