பொதுமக்களிடம் போலீஸார் நல்லுறவை வளர்க்க வேண்டும் என கிருஷ்ணகிரி எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி அறிவுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி காவல் உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட போலீஸாருக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில், ஏடிஎஸ்பி ராஜூ, டிஎஸ்பி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு, தலைமை வகித்து எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி பேசியதாவது:
பொதுமக்களிடம் போலீஸார் கனிவாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும். அதேபோல, சட்டப்படியான நடவடிக்கைகள் எதையும் தயக்கமின்றி மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் நடைமுறையை போலீஸார் கைவிட வேண்டும். மேலும், பொதுமக்களிடம் போலீஸார் நல்லுறவை வளர்க்க வேண்டும்.
மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை, சூதாட்டம், விபச்சாரம் போன்ற சட்டத்துக்கு எதிரான செயல்களை தடுக்க வேண்டும். இதுதொடர்பாக போலீஸாருக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம்.இரவு ரோந்துப் பணியை போலீஸார் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். வெளிச்சம் குறைவாக உள்ள பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், விளையாட்டு திடல்கள், கோயில்கள் ஆகிய பகுதிகளில் அமர்ந்து மது குடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் நிலையத்துக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக சிஎஸ்ஆர் சான்று வழங்க வேண்டும். மேலும், வழக்குப்பதிவும் செய்திட வேண்டும். வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் இருக்கக் கூடாது. தாமதத்தால் பிரச்சினை பெரிதாக வளர வாய்ப்பு ஏற்படும்.
அதேபோல, மாநில அளவிலான பிரச்சினைகளாக இருந்தால் என்னை தொடர்பு கொண்டு வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நடந்த பின்னர் குற்றங்களை கண்டுபிடிப்பதை விட முன்னதாகவே நடவடிக்கை எடுத்து குற்றங்களை தடுக்க வேண்டும்.போலீஸாருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸார் எப்போதும் நேர்மை, கண்ணியத்தை பின்பற்றி நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி உட்கோட்டத்துக்கு உட்பட்ட 200-க்கும் மேற்பட்ட போலீஸார் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago