அரியலூர் மாவட்டத்தில் கரும்பு பயிர்களில் மாவுப்பூச்சிகளின் தாக்கம் அதிகமாக உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர், தா.பழூர் ஒன்றியப் பகுதிகளில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிர் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தற்போது, இப்பகுதியில் 212, 356 மற்றும் குடியாத்தம் 7 ஆகிய கரும்பு ரகங்களை விவசாயிகள் அதிகம் பயிரிட்டுள்ளனர். இதில், முதல் நடவில் நன்கு வளர்ந்து மகசூல் தந்த 212 மற்றும் 356 ரகங்கள், தற்போது 2-வது பயிருக்கு (மறுதாப்பு) தயாராகி வரும் நிலையில், இந்த குறிப்பிட்ட ரகங்களில் மாவுப்பூச்சிகளின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து கரும்பு விவசாயி அறிவழகன் கூறியது: கரும்பு வயல்களை பார்வையிட்ட வேளாண் அதிகாரிகள், மாவுப்பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த பப்ரோபெஸின், அஜாடிராச்டின் ஆகிய மருந்துகளை பரிந்துரை செய்தனர். ஆனால், அந்த மருந்துகள் மருந்துக் கடைகளில் கிடைக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: நாங்கள் பரிந்துரைத்த மருந்துகள் கிடைக்காவிட்டால், தைஸோமெத்தோஷம் 200 கிராம், குளோர்பைரிபாஸ் 250 மில்லி ஆகியவற்றை கலந்து ஏக்கருக்கு 10 கைத்தெளிப்பான் அளவு கரும்பு பயிர்கள் நன்கு நனையும் அளவு தெளித்தால் மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். மேலும், தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மூலம் தேவையான விவசாயிகளுக்கு இலவசமாக மருந்து தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago