கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம் ஜெகதேவியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிருஷ்ணகிரி ரோட்டரி கிளப் மற்றும் கோவை கிழக்கு ரோட்டரி கிளப் சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி கருவி, 62.5 கிலோ வாட்மின் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் டாக்டர்.செல்லக்குமார், பர்கூர் எம்எல்ஏ டி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆக்சிஜன் உற்பத்தியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பேசியதாவது:
கரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகள் உதவிகள் செய்து வருகின்றன. ஜெகதேவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு நிமிடத்திற்கு 100 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 50 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்கும். தற்போது 20 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி பைப்லைன் மூலம் சென்றடைய வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் சுயபாதுகாப்பு, கட்டுப்பாட்டுடன் தேவையான காரணத்திற்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
இதில், முன்னாள் எம்பி சுகவனம், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் வெங்கடேசன், உசைன் தோஸ்த், ஜோ அன்னாஜி, மகேஷ், பன்னீர் செல்வம், சன்ஜீவ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago