கரோனா பாதிப்பு, தொடர் வருவாய் இழப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள மாவிவசாயிகள், தோட்டங்களில் உள்ள மாமரங்களை வெட்டி அகற்றும் பணியில் வேதனையுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மாமரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மாங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, தோத்தாபுரி ரகம் 60 சதவீதமும், செந்தூரா மற்றும் நீலம் ரகங்கள் 30 சதவீதமும், அல் போன்ஸா 5 சதவீதமும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.பீத்தர், மல்கோவா, ருமானி, பங்கனப்பள்ளி, காலப்பாடு போன்றவை 5 சதவீதம் சாகுபடி செய்யப்படுகிறது.
மா விவசாயம் வாழ்வாதாரமாக கொண்டு மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் பெரிய தோட்டங்கள் வைத்துள்ள 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாவிவசாயிகள் வருவாய் இழப்பினை சந்தித்து வருவதால், மா விவசாயத்தை கைவிட்டு மாற்று பயிர் செய்ய திட்டமிட்டு மாமரங்களை வெட்டி அகற்றும் பணியில் விவசாயிகள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக மா விவசாயிகளின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் செயலாளர் சவுந்திரராஜன், கேஆர்பி அணை இடதுபுறக்கால்வாய் நீட்டிப்பு பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவகுரு ஆகியோர் கூறும்போது, மாவிவசாயத்தில் தொடர்ந்து வருவாய் இழப்பினை சந்தித்து வருகிறோம். 2019-ம் ஆண்டு மழையின்றி ஆயிரக்கணக்கான மாமரங்கள் காய்ந்து போயின. அரசு பதிவேட்டில் 60 லட்சம் மாமரங்கள் உள்ளதாக பதியப்பட்டுள்ளது.
ஆனால் அரசு கணக்கைவிட 50 சதவீதம் கூடுதலாக மாமரங்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் மாந்தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு, அறுவடைக் காலங்களில் வரும் வருவாய் மூலம் குழந்தைகளின் கல்வி, திருமணம் உட்பட அனைத்து செலவுகளும் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் வறட்சி, மழையின்மை, கரோனா ஊரடங்கு, மாங்கூழ் தொழிற்சாலைகளின் சிண்டிகேட் விலை நிர்ணயம் என 5 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரை செலவு ஏற்படுகிறது.
இதேபோல் மாங்காய்களை தாக்கும் புதிய வகையான நோய், தரமற்ற மருந்து விற்பனை, புதிய தொழில்நுட்பம் குறித்த பயிற்சி இல்லாமை என பல்வேறு இன்னல்களை மாவிவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
இதன் காரணமாகவே, போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி பகுதியில் மாந்தோட்டங்களில் மாமரங்களை வெட்டி அகற்றும் பணியில் மா விவசாயிகள் வேதனையுடன் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 5 ஆயிரம் மாமரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மாவிற்கு உரிய விலை, தரமான மருந்துகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு, பயிற்சி உள்ளிட்டவை மூலம் மாவிவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago