மேற்பனைக்காட்டில் மதகு உடைந்த இடத்தில் உள்ள - மணல் மூட்டைகள் தண்ணீரில் இழுத்து செல்லப்படும் அபாயம் : நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் மேற் பனைக்காட்டில் கடந்த ஆண்டு மதகு உடைந்த இடத்தில் அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள் தண்ணீரில் இழுத்து செல்லப்படும் அபாயம் உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்லணையிலிருந்து ஜூன் 16-ம் தேதி திறந்து விடப்பட்ட காவிரி நீர், கல்லணைக் கால்வாய் வழியாக நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வந்து சேர்ந்தது. இதில், புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு நீர்த்தேக்கி வரை வரும் 500 கன அடி தண்ணீரில், ஆயிங்குடி பாசன பிரிவு கால்வாயில் 400 கன அடியும், பேராவூரணி பகுதிக்கு 100 கன அடியும் திறந்துவிடப்படுகிறது.

மேற்பனைக்காடு நீர் தேக்கியில் இருந்து பிரிந்து செல்லும் ஆயிங்குடி பாசன பிரிவு கால்வாயில் சுமார் 5 மீட்டர் தூரத்தில் உள்ள மதகு கடந்த ஆண்டு சேதமடைந்துவிட்டது. அப்போது, மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக மதகு சீரமைக்கப்பட்டது.

அதன்பிறகு ஒரு ஆண்டாகி யும் மதகு நிரந்தரமாக சீரமைக் கப்படவில்லை. தற்போது, தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கூடுதலாக சில மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால், மணல் மூட்டைகள் தண்ணீரில் இழுத்து செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவ சாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மேற்பனைக்காடு பாசன விவசாயிகள் கூறியதாவது: மதகு உள்ள பகுதியில் கடந்த ஆண்டு வைக்கப்பட்ட மணல் மூட்டைகள், அச்சுக்கம்புகள் மக்கி பலவீனமாகி உள்ளன.

இதனால், நிகழாண்டு தண்ணீர் திறப்பதற்குள் மதகை புதிதாக கட்ட வேண்டும் என வலியுறுத்தியும் நிறைவேற வில்லை. மேலும், ஏற்கெனவே அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகளை அப்புறப்படுத்தி விட்டு, புதிய மணல் மூட்டைகளை யாவது அடுக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.

அதையும் செய்யாமல், பழைய மணல் மூட்டைகள் மீது புதிய மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளதால், அவை தண்ணீரில் அடித்து செல்லப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதற்கு பொதுப் பணித்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்