கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட7,862 மது பாட்டில்கள் பறிமுதல் : 2 வேன், கார்கள் பறிமுதல்; 7 பேர் கைது

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் மற்றும் கோவையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது கர்நாடகாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 7862 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கர்நாடக மாநிலத்தில் இருந்து மாட்டுத் தீவனம் ஏற்றி வந்த வாகனத்தில் மது பாட்டில்களை கடத்தி வந்து, குன்னத்தூர் - செங்கப்பள்ளி சாலையில் விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குன்னத்தூர் - செங்கப்பள்ளி சாலை பூலாங்குளம் பகுதியிலுள்ள சம்பத்குமார் என்பவருக்கு சொந்தமான வாடகை கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 ஆயிரத்து 912 மது பாட்டில்கள்விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்யும் குன்னத்தூர் பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெய்சன் (38), கரூர் மனவாடி கந்தாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலசிங் (22), ஈரோடு மாவட்டம் கோபி, கெட்டிச்செவியூர் சாந்தி பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (22) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 வேன், ஒரு கார், ரூ. 6.50 லட்சம் மதிப்பிலான 6,912 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையில் நால்வர் கைது

கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் ராமநாதபுரம் காவல்துறையினர், புலியகுளம் அருகே நேற்று முன்தினம் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டதில், கர்நாடகா மாநிலத்தில் வாங்கப்பட்ட 950 மதுபாட்டில்கள் இருந்தன. காரில் இருந்த முத்துக்குமார்(39), பிரேம்(26), கோபாலகிருஷ்ணன் (30), சூர்யா(25) ஆகியோரை கைது செய்த போலீஸார், ஒன்றரை லட்சம் ரூபாயையும், காருடன் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

கேரள மது பறிமுதல்

கோவை மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ்மணி தலைமையில் தமிழக- கேரளா எல்லைப்பகுதியில் உள்ள நடுப்புணி, கோபாலபுரம், வடக்குகாடு, ஜமீன் காளியாபுரம் மற்றும் நெடும்பாறை கிராமங்கள் மற்றும் எல்லைச்சாவடிகளில் போலீஸார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் வடக்கிபாளையம் மற்றும் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாகன சோதனையில், 66.5 லிட்டர் கேரளா மதுபானம் மற்றும் 14 லிட்டர் கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்