கிருஷ்ணகிரியில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில், 14 வகை மளிகைப் பொருட்கள் மற்றும் 2-வது கட்டமாக ரூ. 2 ஆயிரம் கரோனா நிவாரணம் கடந்த 15-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர், வேப்பனப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்களில் ஒன்றிரண்டு பொருட்கள் இல்லை. இதற்கான அறிவிப்பும் ஒட்டப்பட்டுள்ள நிலையில், மற்ற பொருட்களை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். ஆனால் மீதமுள்ள பொருட்களை, விடுபட்ட வர்களை அடையாளம் கண்டு கொடுப்பதில் சிரமம் ஏற்படும்.
எனவே, 14 வகை பொருட்களையும் ஒன்றாக சேர்த்து வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு சில இடங்களில் நிவாரணத் தொகை மட்டும் வழங்கி வருகின்றனர். இதனால் மளிகைப் பொருட்கள் வாங்க வரும் அட்டைதாரர்கள் ஏமாற்றத்துடன் செல்வதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் கூறுகையில், நிவாரணத்தொகை முழுமையாக வந்துவிட்டது. ஆனால் பொருட்கள் வருவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் வற்புறுத்தலால், குறைவான பொருட்களுடன் ரேஷன் கடை விற்பனையாளர்கள் கொடுத்துள்ளனர். இனி மளிகைப் பொருட்கள் குறைவாக இருந்தால் கொடுக்க வேண்டாம் எனவும், பணம் மட்டும் கொடுத்துவிட்டு பொருட்கள் வந்தவுடன் 14 பொருட் களையும் சேர்த்தே வழங்கவும் அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago