கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உற்பத்தி பாதிப்பால், மா நாற்றுகள் விலை உயர்ந்துள்ளதாக மாவிவசாயிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, சந்தூர், நாகரசம்பட்டி, அரசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் மா நாற்று மற்றும் தென்னை, கொய்யா நாற்றுகளை அதிகளவில் உற்பத்தி செய்து, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததாலும், மாங்காய்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் மா நாற்று உற்பத்தி பாதிக்கப்பட்டு, தற்போது விலை உயர்ந்துள்ளதாக மா விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக சந்தூர் மா விவசாயி அறிவழகன் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் மா அறுவடைக்குப் பின்பு, மாங்கூழ் தொழிற்சாலைகளில் இருந்து மாங்கொட்டைகள் வாங்கி, பதியம் போடப்படுகிறது. ஒரு ஆண்டு பராமரிக்கப்பட்டு நாற்று எடுக்கப்படுகிறது.
இந்த நாற்றுக்கள் மூலம் ஓட்டு மாஞ்செடிகள் உற்பத்தி செய்யப்படு கிறது. கடந்த ஆண்டு மழை இல்லாததாலும், மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டதாலும் மா நாற்றுகள் உற்பத்தி செய்யப்படும் பரப்பளவு வெகுவாக குறைந்தது.
தற்போது ஒரு மாநாற்று ரூ.50 முதல் ரூ. 65 வரை தரத்தை பொறுத்து விற்பனையாகிறது. கடந்த ஆண்டு ஒரு மா நாற்று ரூ.20-க்கு விற்பனையானது. மா நாற்றுகள் விலை உயர்ந்துள்ளதால், நிகழாண்டில் மாஞ்செடிகள் விலையும் உயரும்.
தற்போது பெங்களூரா ரக மாஞ்செடி ஒன்று ரூ.250-க்கு விற்பனையாகிறது. நிகழாண்டில் கடந்த சில நாட்களாக மாங்கொட்டை மாங்கூழ் அரவை தொழிற்சாலைகளில் இருந்து வரதொடங்கியுள்ளது. தற்போது ஒரு டன் மாங்கொட்டை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கொள்முதல் செய்வதாக தெரி வித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago