கோயில்களில் தமிழ் வழிபாடு மற்றும் பூஜை செய்ய புதிய சட்டம் இயற்றக் கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 3-ம் தேதி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த தெய்வத் தமிழ்ப் பேரவை முடிவு செய்துள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கருவறை, வேள்விச்சாலை, கலசக் குடமுழுக்கு அனைத்திலும் தமிழ் மந்திரங்களைச் சொல்லி வழிபடுதல், பூஜை செய்தல் போன்றவை அன்றாட நடைமுறையாக, இயல்பாகச் செயல்பட வேண்டும். விரும்பிக் கேட்பவர்களுக்கு மட்டுமே கருவறையில் சம்ஸ்கிருத மொழியில் வழிபாடு, அர்ச்சனையும் நடத்த வேண்டும். இதற்கான சட்ட விதிமுறைகளை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்வழிக் கருவறைப் பூசகர் அல்லது அர்ச்சகர்களை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும். அதில், அர்ச்சகர் பயிற்சிபெற அனைத்துச் சாதியினருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். ஏற்கெனவே, பயிற்சி பெற்ற 200 அர்ச்சகர்கள் வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு உடனடியாக கோயில்களில் அரசுப் பணி வழங்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தைச் செயலாக்கமிக்கதாகவும், ஊழல் இல்லாத தாகவும், அரசியல்வாதிகளின் சட்டவிரோத தலையீடுகள் இல்லாததாகவும் புத்தாக்கம் செய்ய வேண்டியது அவசரத் தேவை. இத்துறையில் சீர்திருத்தங்களைச் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து, பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெற வேண்டும்.
ஆன்மிகத்தின் பெயரால் நடைபெறும் போலித்தனத்தைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஜூலை 3-ம் தேதி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago