‘நீட்’ தேர்வை தமிழகத்தில் ரத்து செய்வதன்மூலம், ஏழை வீட்டுப் பிள்ளைகளும் மருத்துவராகும் வாய்ப்பு கிடைக்கும். அதன்மூலம் நீட் தேர்வு அச்சத்தில் உயிரிழந்த எங்கள் மகளின் கனவு நனவாகும் என திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுயின் பெற்றோர், நீதிபதி ஏ.கே.ராஜன் குழு வினருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக திருப்பூர் வெள்ளியங்காடு முத்தையன் கோயில் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த பி.செல்வராஜ், இவரது மனைவி எஸ்.ராஜலட்சுமி ஆகியோர், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
எங்களது ஒரே மகள் ரிது, சிறு வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற ஆசையோடு வளர்ந்து வந்தார். நன்றாக படிக்கக் கூடியவர். கடந்த 2019-ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில், 471 மதிப்பெண்கள் எடுத்தார். நீட் தேர்வையும் எதிர்கொண்டு எழுதினார். ஆனால் தேர்வு முடிவில், மதிப்பெண் என்னவாக வருமோ, மருத்துவக் கனவு வீணாகப் போய்விடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்துகொண்டார். எங்கள் குடும்பத்தில் முதல்முறையாக மருத்துவராகி, இந்த சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே எங்களிடம் கூறிவருவார். அந்தக் கனவு நனவாகவில்லை.
கிடைத்த கூலி வேலை செய்தால்தான், உணவுக்கு ஆதாரம் என்பதுதான் எங்கள் குடும்பத்தின் நிலை. தனியார் ‘நீட்’ பயிற்சி மையங்களில் சேர்ந்து படிப்பதும் எங்களால் இயலாது. எங்கள் பிள்ளையைப்போல எண்ணற்ற ஏழைப் பிள்ளைகள், மருத்துவர் கனவை சுமந்து கொண்டிருக்கின்றனர். அவர்களாவது மருத்துவர்களாகி, அவர்களின் மூலம் என் மகளின் கனவு நனவாக வேண்டும். இதற்கு நீதிபதி ஏ.கே.ராஜன் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களது உயிரைக் காவு வாங்கும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்து, பழைய முறையையே தொடர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் உருக்கமாக கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago