சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே சாலையின் தரத்தை ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கையால் அளந்து பார்த்து ஆய்வு செய்ததால் ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பிரதமர் கிராமச் சாலைத்திட்டத்தில் தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. சாலைகளின் தரத்தை அதிகாரிகளும் முறையாகக் கண்காணிப்பது இல்லை. தரமற்ற முறையில் அமைப்பதால் பெரும்பாலான சாலைகள் சில மாதங்களிலேயே சேதமடைந்து விடுகின்றன.
காளையார்கோவில் ஒன்றியத்தில் பிரதமர் கிராமச்சாலைத் திட்டத்தில் 2020-21-ம் ஆண்டுக்கு ரூ.17 கோடிக்கு 52 சாலைப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால், 48 சாலைகளில் 50 சதவீத பணிகள்கூட முடிவடையவில்லை. மேலும் 4 சாலைகளில் இன்னும் அடிப்படைப் பணிகளைக்கூட தொடங்கவில்லை.
இந்நிலையில் காளையார்கோவில் ஒன்றியத்தில் சாலைப் பணிகளை ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் சொல்வதைக் கேட்காமல், சரியான தரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளதா என கலவையின் தரத்தை ஆய்வு செய்து கையால் அளந்து பார்த்தார். இதை எதிர்பார்க்காத ஒப்பந்ததாரர்களும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருக்கக் கூடாது. பணிகள் தரமாகவும், விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் தாமதம் ஏற்பட்டால் ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago