தென்பெண்ணை ஆற்றில் இருந்து பாலகுறி ஏரிக்கு நீரேற்று இயந்திரம் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி ஒன்றியம் பாலகுறி கிராமத்தில், 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் போதிய அளவிற்கு குடிநீர் விநியோகம் செய்யவில்லை என மக்கள் நீண்ட நாட்களாக புகார் கூறுகின்றனர். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே இங்குள்ள பாலகுறி ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீரேற்று இயந்திரம் மூலம் தண்ணீர் நிரப்பினால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் கிடைக்கும் என கிராம மக்கள் கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்து கிராம மக்களுடன் எம்எல்ஏ அசோக்குமார் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது, தற்போது இந்த ஏரி சீரமைக்கப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. ஏரியில் தண்ணீர் நிரப்பினால், பெல்லாரம்பள்ளி, சின்ன பெல்லாரம்பள்ளி, வெங்கிகானப்பள்ளி, பழையூர் உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே இதுகுறித்து ஆய்வு செய்து கிராம மக்களுடன் ஆலோசித்து, நீரேற்று இயந்திரம் மூலம் தண்ணீர் கொண்டுவர ஒரு ஆய்வறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். விரைவில் இந்த ஏரிக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன். சோக்காடி ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago