திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் சாலை ஜேகேஜே காலனியை சேர்ந்தவர் சண்முகம் (40). லாரி ஓட்டுநர். இவரது மனைவி மும்தாஜ் (எ) தனலட்சுமி (35).தம்பதிக்கு, இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
தனலட்சுமிக்கு, கடந்த 12-ம் தேதிபல்லடம் அரசு மருத்துவமனையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. நஞ்சுக்கொடி சுற்றியநிலையில் குழந்தை பிறந்ததாகவும், தனலட்சுமிக்கு உதிரப்போக்கு அதிகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பலவீனமாக இருந்த தனலட்சுமி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து, குழந்தையுடன் தனலட்சுமி தலைமறைவானார்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு எவ்வித தகவலும் அளிக்காமல் தப்பித்து வந்ததால், பல்லடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்கள், தனலட்சுமியின் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது குழந்தை இறந்துவிட்டதாகவும், காளி வேலம்பட்டி பிரிவு அருகே சடலத்தை அடக்கம் செய்ததாகவும் தம்பதி தெரிவித்துள்ளனர்.
செவிலியர்கள் அளித்த தகவலின்பேரில், பல்லடம் போலீஸாருக்கு, கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி புகார் அளித்துள்ளார். இதையடுத்து பல்லடம் வட்டாட்சியர் எஸ்.தேவராஜ் மேற்பார்வையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்,பல்லடம் போலீஸார் முன்னிலையில், குழந்தையின் சடலத்தை நேற்று தோண்டியெடுத்து, சுமார் மூன்று மணிநேரம் பிரேத பரிசோதனை செய்தனர்.
பிரேத பரிசோதனை முடிவுகள் வரும் வரை, வீட்டைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என தம்பதியை, வருவாய்த் துறை மற்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago