போலி பட்டா மூலம் ரூ.93 கோடி இழப்பீடு பெற்ற விவகாரம் - 83 பேரின் வங்கி கணக்கை முடக்க உத்தரவு :

By செய்திப்பிரிவு

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக அரசு நிலத்துக்கு போலி பட்டா மூலம் ரூ.93 கோடி இழப்பீடு பெற்ற விவகாரத்தில், 83 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான நில எடுப்பின்போது, தனியார் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. 2000-ம் ஆண்டில் பீமன்தாங்கல் கிராமத்தில் அரசு நிலத்தை தனியார் நிலமாக மாற்றி, போலி பட்டா பெற்று ஆசிஷ் மேத்தா என்பவர் ரூ.30 கோடியும், செல்வம் என்பவர் ரூ.3 கோடியும் இழப்பீடு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, ஆசிஷ் மேத்தா, செல்வம், அப்போதைய நில எடுப்புப் பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா உட்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த ரூ.33 கோடியை திரும்ப வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணயரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதேபோல, முறைகேடாக பெற்ற 36 ஏக்கர் நிலங்களின் பட்டாக்களை ரத்து செய்து, நில நிர்வாக ஆணைய அலுவலகம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் நடத்திய விசாரணையில், மேலும் 46 ஏக்கர் நிலங்களுக்கு இதேபோல தனியார் பெயரில் பட்டா மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த நிலங்களுக்கான பட்டாவையும் ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். பட்டா ரத்து செய்யப்பட்ட 82 ஏக்கரில் பெரும்பாலானவை ஜமீன் ஒழிப்புச் சட்டத்தின்படி அனாதீனமாக மாற்றப்பட்ட நிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பீமன்தாங்கல் கிராமத்தில் மொத்தம் 82 ஏக்கர் நிலங்களின் பட்டா ரத்து செய்யப்பட்ட பிறகு, தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தின் நில எடுப்புப் பிரிவு அதிகாரிகள், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர். அதில் 83 பேருக்கு முறைகேடாக ரூ.93 கோடி இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை வசூலிப்பதற்காக, அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நில எடுப்புப் பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதேபோல, 6 வழிச்சாலைக்காக தாமல், ஏனாத்தூர், வேடல், பெரும்புதூர், பென்னாத்தூர் உள்ளிட்ட கிராமங்களிலும் நிலம் கையகப்படுத்தப்பட்டு, இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அங்கு ஏதேனும் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்