செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று குறைந்து வருவதால் கடந்த 14-ம் தேதிமுதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு முதல் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டிருந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் பலர் தனியார் பள்ளிகளிலிருந்து தனது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் இலவச கல்வி, இலவச சீருடை, இலவச பாடப் புத்தகம், முட்டையுடன் மதிய உணவு என தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. மேலும் உள்ளூர் அளவில் பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்துவருவதுடன், வீடுகளுக்கே சென்று சேர்க்கை நடத்தி வருகின்றனர். இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதிமுதல் தற்போது வரை 14 ஆயிரத்து 958 மாணவ மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 2 ஆயிரத்து 597 மாணவ மாணவிகள் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெற்றோர்கள் சிலர் கூறும்போது, "கடந்த ஆண்டு பள்ளி நடைபெறாமல் இருந்தாலும் இணைய வழியில் வகுப்புகள் நடந்ததால் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.
கரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நாங்கள் பல ஆயிரங்களை கல்விக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. இதனால் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்த்து வருகின்றோம் என்றனர். மேலும் அரசுப் பள்ளிகளில் சுகாதாரமான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
கல்வியாளர்கள் கூறும்போது, "அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நிகழாண்டு காஞ்சி, செங்கை மாவட்டத்தில் கணிசமான அளவு சேர்க்கை அதிகரித்துள்ளது. இதற்கான பங்களிப்பையும், முயற்சியையும் மேற்கொண்ட ஆசிரியர்களின் பணி பாராட்டத்தக்கது" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago