கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு இம்மாத இறுதிக்குள் தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆலோசகர் நசீர் அகமது தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்றார். இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன் ஒருங்கிணைத்தார். மகளிர் அணி தலைவர் பெருமா முன்னிலை வகித்தார்.
இலவச மின்சாரம் வேண்டும் என போராடி உயிர் நீத்த 57 தமிழக விவசாயிகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5-ம் தேதி பேரணி மற்றும் மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் இப்பேரணி மற்றும் மாநாடு ரத்து செய்யப்படுகிறது.
விவசாயிகள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஆவின்பால், தினம் ஒரு கோடி லிட்டர் வரை வாங்கிக் கொள்கிறோம் எனக்கூறப்பட்டது.
ஆனால் கிருஷ்ணகிரி ஆவின் கூட்டுறவு ஒன்றியத்தில் தினம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் பெற்று வர்த்தகம் செய்து வந்தது. இப்போது 90 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே பெறுகின்றனர். எனவே விவசாயிகள் வழங்கும் அனைத்து பாலையும் ஆவின் நிர்வாகம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து ஜூன் மாத இறுதிக்குள் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். இதனால் பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல் இருக்காது. உரம் அதிகம் தேவைப்படாது. பட்டத்து நடவில் நல்ல மகசூல் கிடைக்கும். எனவே இந்த மாத இறுதிக்குள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago