தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் உள்ள கல்லணைக் கால்வாய் தலைப்பு பகுதி முதல் வண்ணாரப்பேட்டை வரை கல்லணைக் கால்வாயில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பாசன பகுதிகளை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் நீர்வள ஆதாரத் துறை சார்பில் கல்லணைக் கால்வாய் அமைப்பு விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கும் திட்டத்தில் கல்லணை பிரதான கால்வாய், கிளை வாய்க்கால் மற்றும் இக்கால்வாயின் மூலம் பாசனம் பெறும் ஏரிகள் ஆகியவற்றின் பாசன உட்கட்டமைப்பு மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை கல்லணையில் உள்ள கல்லணைக் கால்வாய் தலைப்பு முதல் வண்ணாரப்பேட்டை வரை 34 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று தஞ்சாவூர் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, கல்லணைக் கால்வாயில் இந்தலூர் பாசன மதகு பணி, ஆனந்த காவேரி, அய்யனாபுரம் வாரி மற்றும் முதலை முத்து வாரியில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகள், கல்லணைக் கால்வாயில் கல்வராயன் பேட்டையில் உடைப்பு ஏற்பட்ட பகுதி, குருவாடிப்பட்டியில் நடைபெற்றுவரும் நீரொழுங்கி பணி ஆகியவற்றை ஆய்வு செய்த ஆட்சியர், நீர்க்குமிழி, மதகுகள், நீர்த்தேக்கி மற்றும் நீர் வழிந்தோடும் பாலம் ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்தும், மழைக்காலங்களில் இவற்றில் அதிகபட்சமாக சென்ற நீரின் அளவு குறித்தும் கேட்டறிந்தார். மேலும், கல்லணைக் கால்வாய் பாசன வசதிகள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட விவசாய பரப்பளவு குறித்தும் பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர்கள் (வருவாய்) சுகபுத்ரா, (வளர்ச்சி) காந்த், கல்லணைக் கால்வாய் செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகவேல், வேளாண்மை துறை இணை இயக்குநர் ஜஸ்டின், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரமேஷ், உதவி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago