வேலூர் மாவட்டத்தில் மினி லாரியில் மாடு திருட வந்த அரை நிர்வாண கும்பலை சுமார் 50 கி.மீ தொலைவுக்கு காவலர்கள் விரட்டிச் சென்ற சம்பவத்தின்போது காட்பாடி ஆய்வாளரின் ஜீப் விபத்தில் சிக்கிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் இரு சக்கர வாகன ரோந்து காவலர் ஒருவர் நேற்று அதிகாலை 3 மணிய ளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, புதுவசூர் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த மினி லாரியை சோதனையிட சென்றார். காவலர் வருவதைப் பார்த்ததும் மினி லாரியில் இருந்த மர்ம நபர்கள் வேகமாக புறப்பட்டனர்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வாக்கி டாக்கி மூலம் அந்த காவலர் தகவல் கொடுத்தார். மேலும், அந்த மினி லாரியை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றார். அதி வேகத்தில் சென்ற மினி லாரி அரப்பாக்கம், திருவலம் வழியாக சென்றது. அந்த லாரியின் பின்பக்கம் 4 பேர் அடங்கிய கும்பல் டிராயருடன் அரை நிர்வாணமாக இருந்ததுடன் காவலரை மிரட்டும் வகையில் சைகைகளை காண்பித்ததுடன் கற்களையும் வீசியுள்ளனர்.
அதேநேரம், காட்பாடி உட்கோட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஆய்வாளர் திருநாவுக்கரசு இருந்தார். அவர் உடனடியாக திருவலம் கூட்டுச்சாலை சந்திப்புக்கு விரைந்து சென்றார். அதற்குள், அந்த மினி லாரி வேகமாக சென்றதால் அந்த வாகனத்தை பின்தொடர்ந்து ஜீப்பில் ஆய்வாளர் திருநாவுக்கரசு சென்றார். அந்த மினி லாரி பொன்னை, மாதாண்டகுப்பம் வழியாக சென்றது.
திருவள்ளூர் மாவட்டம் வழியாக சென்றதால் அந்த மாவட்ட காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த நேரத்தில் கம்மவார்பேட்டை அருகே இரும்பு தடுப்பின் மீது காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு சென்ற ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார். அதற்குள் அந்த மினி லாரி மின்னல் வேகத்தில் ஆர்.கே.பேட்டை வழியாக திருவள்ளூர் மாவட்டத்துக்குச் சென்றது. சுமார் 50 கி.மீ தொலைவுக்கு விரட்டிச் சென்றும் மர்ம நபர்களை காவல் துறையினரால் பிடிக்க முடியவில்லை. அதிகாலை நேரம் என்பதால் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினராலும் அந்த மினி லாரியை மடக்கிப் பிடிக்க முடியவில்லை என்பது தெரியவந்தது.
தப்பிச் சென்ற கும்பல் மாடு திருடும் கும்பலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, அந்த வாகனத்தின் பதிவெண் விவரங்களுடன் தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். விரட்டிச் சென்று விபத்தில் சிக்கிய காவல் துறையின் ஜீப்பின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago