திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளத் தொகுப்பினை, ஜாதிவாரியாக பட்டியல் வெளியிட்டு வழங்கவேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அரசாணை அனுப்பியுள்ளதாகக் கூறியும், தொழிலாளர்களிடையே ஜாதிவாரியாக பிரிவினை ஏற்படுத்தக்கூடாது என மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக அதிகப்படுத்த வேண்டும். 15 நாட்களில் ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.சண்முகம் தலைமை வகித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டதுணைச் செயலாளர் துரைவளவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின்பு கோரிக்கைகள் அடங்கிய மனுவை,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் ஹமீதிடம் வழங்கினர்.
ஆட்சியரிடம் புகார்
உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அதன்நிர்வாகிகள் சி.சுப்பிரமணியம்,ஆ.பஞ்சலிங்கம் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.அதில் ‘தேசிய ஊரக வேலைத்திட்ட தொழிலாளர்களிடையே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து, கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago