தனது தந்தையைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, செங்கோட்டையில் செல்போன் டவரில் ஏறி இளம்பெண் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை தாட்கோ நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மகள் அபிதா (24). இவர், நேற்று மாலையில் செங்கோட்டை அரசு மருத்துவமனை அருகே உள்ள செல்போன் டவர் மீது ஏறி நின்றுகொண்டு, கீழே குதிக்கப் போவதாக கூறினார். அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு படையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தனது தந்தையை புளியரை காவல் நிலைய போலீஸார் பொய் வழக்கு போட்டு தாக்கியதாகவும், போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடன் பேசி உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நீண்ட நேரம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும், இரவு வரை அவர் கீழே இறங்கிவரவில்லை.
இந்நிலையில், நேற்று 2 வீடியோக்களை அவர் யுடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், “ரேஷன் அரிசி கடத்தியதாகக் கூறி எனது தந்தையை போலீஸார் அடித்து துன்புறுத்தி உள்ளனர். உடல் முழுவதும் பலத்த காயம் உள்ளது. செங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள அவரை, வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கட்டாயப்படுத்துகின்றனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வோம்” என்று அபிதா கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago