உணவகங்களில் வாடிக்கை யாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக ஓட்டல்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடசுப்பு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, "கரோனா தொற்றால் உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. உணவகங்களில் பார்சல் வியாபாரம் 10 சதவீதம் மட்டுமே நடைபெறுகிறது. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட தடைவிதிக்கப்பட்டதால் 80 சதவீதம் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். வேளாண் விளைப்பொருட்களான பால், காய்கறி, பழங்கள், வாழை இலை போன்றவற்றின் சந்தை வாய்ப்பு குறைந்துள்ளது.
வங்கி கடன்களுக்கான வட்டி மற்றும் மாதாந்திர தவணை தொகை செலுத்த முடியாமல் ஏராளமான உணவகங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கட்டிட வாடகை, மின்கட்டணம், வரி இனங்களை செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, உணவகம் மற்றும் தேநீர் கடை உரிமையாளர்களை பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
எங்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலித்து உணவகம், தேநீர் கடைகளில் 50 சதவீதம் கட்டுப்பாடுடன் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்க வேண்டும். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக பின்பற்றப்படும் என ஓட்டல்கள் சங்கம் சார்பில் உறுதியளிக்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago