திருப்பத்தூர் நகராட்சியில் கரோனா தடுப்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் காய்ச்சல் மற்றும் நோய் கண்டறியும் பணிகள் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "திருப் பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவுறுத்தலின்படி உள்ளாட்சி அமைப்புகளில் கரோனா தொற்று கண்டறியும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து காய்ச்சல் மற்றும் நோய் கண்டறியும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக, நகராட்சி பணியாளர்கள் 130 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 100 வீடுகளுக்கு ஒரு நபர் என்ற வீதத்தில் கரோனா தொற்று கண்டறியும் பணிகள் நடந்து வருகிறது. இவர்கள், வீடு, வீடாகச் சென்று அங்கு உள்ள நபர்களின் உடல் நலம் மற்றும் வெப்பமானி கொண்டு காய்ச்சல் உள்ளதா ? என பதிவு செய்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் இந்த அறிக்கை நகராட்சி நிர்வாகத்தின் மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். இதில், யாருக்காவது காய்ச்சல் மற்றும் கரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால், அவர்களுடைய வீட்டுக்கு மருத்துவக் குழுவினர் நேரடியாகச் சென்று பரிசோதனை நடத்தி மருந்துகள் வழங்கப்படும்.
பாதிப்பு அதிகம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது கரோனா கேர் சென்டருக்கு கொண்டு செல்லப்படுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி தொற்று பரவல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா பாதிப்பு இல்லாத இடமாக உருவாக பொதுமக்கள் தங்களுடைய வீட்டுக்கு வரும் நகராட்சி பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago