நீலகிரி மாவட்ட மக்களுக்கு - இ-பாஸ் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்க மா.கம்யூ வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் தலைமை வகித்தார்.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தமக்களுக்கு இ-பாஸ் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அத்தியாவசியக் காரணங்களுக்காக நீலகிரி மாவட்ட மக்கள், இதர மாவட்டங்களுக்கு சென்று வரும்போது ஒவ்வொரு முறையும் இ-பாஸ் வாங்க வேண்டும் என வலியுறுத்துவது சரியல்ல. கடந்த ஆண்டைப்போல, நீலகிரியை சேர்ந்த மக்கள், ஏதேனும்ஓர் அடையாள அட்டையைக் காண்பித்து, நீலகிரி மாவட்டத்துக்குள் வரலாம் என்ற உத்தரவை தற்போதும் அமலாக்க வேண்டும்.

பொது முடக்கம் அமலில் உள்ளதால் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு, சுய உதவிக் குழுக்களுக்கான நுண்கடன் தவணையை வசூலிக்க காலஅவகாசம் வழங்க வேண்டும். எவ்வித நிர்பந்தமும் செய்து கடன் வசூலில் ஈடுபடக் கூடாது என தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும், கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டுள்ள நுண்நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் தவணைக்கான காலஅவகாசத்தை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்படபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், ஆர்.பத்ரி உட்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்