தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை : வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், தனியார் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட 30 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்பெற்றுக்கொண்டார்.

அதன்பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது ‘‘தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. தனியார் அமைப்பு வழங்கியுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள், மாவட்டத்தில் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ளும் வகையில் உதகை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 80 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. கரோனா தொற்றை தடுக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும், மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார். அப்போது, மாவட்டவருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்