விற்பனை ஆகாததால் சாலையோரம் கொட்டப்படும் மல்லிகைப்பூ : விவசாயிகள், வியாபாரிகள் வேதனை

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி அருகே மல்லிகைப் பூக்களுக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் மல்லிகைப் பூக்களை சாலையோரம் கிலோ கணக்கில் கொட்டிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக மலர் வியாபாரிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், அவதானப்பட்டி, நாட்டாண்மைக் கொட்டாய், மலையாண்டஅள்ளி, வேலம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப் பூ சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதால் மல்லிகைப் பூக்கள் விற்பனை சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள், மலர் வியாபாரிகள் மல்லிகைப் பூக்களை சாலையோரம் கொட்டிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

இதுதொடர்பாக மலர் வியாபாரிகள் கூறியதாவது:

கரோனா ஊரடங்கால் இங்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் மலர்கள், ஈரோடு, மேட்டுப்பாளையம், பெங்களூரு பகுதிகளில் வாசனை திரவிய தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் 50 சதவீதத்திற்கும் மேலான தொழிற் சாலைகள் இயங்கவில்லை.

இதனால் நாங்கள் கொள்முதல் செய்யும் மல்லிகைப் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் சாலையோரம் கொட்டிச் செல்கிறோம். நாங்கள் விவசாயிகளிடம் மல்லிகை பூவை கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை கொள்முதல் செய்கிறோம். தற்போது மல்லிகைப் பூக்கள் விளைச்சலும் அதிகமாக உள்ளது. அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு, ஊரடங்கில் முழுமையான தளர்வுகள் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே மல்லிகைப் பூக்களுக்கான விலை கிடைக்கும் என்றனர்.

விவசாயிகள் கூறும்போது, காவேரிப்பட்டணம் திம்மாபுரம் தோட்டக்கலைத்துறை பண்ணை யில் மலர்களில் இருந்து வாசனை திரவியம் தயாரிப்பது தொடர்பாக பயிற்சி அளிக்க இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதுவரை பயன் பாட்டிற்கு வரவில்லை. அங்கு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து, மலர் விவசாயிகள், தொழில் தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விலை இல்லாதபோது வாசனை திரவியம் தயாரித்து வருவாய் ஈட்ட முடியும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்