தென்காசி மாவட்டத்துக்கு - கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுமா? :

தென்காசி மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டபோது, அச்சம் காரணமாக ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டபோதும் பெரும்பாலானோர் தயக்கம் காட்டினர்.

இந்நிலையில், கரோனா இரண்டாம் அலையில் தென்காசி மாவட்டத்தில் உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்களாக கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மூன்றாம் அலையின் தாக்கம் விரைவில் வருமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் விழிப்புணர்வு காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தியும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்துக்கு 10,500 டோஸ் தடுப்பூசிகள் வந்தன. இதில், ஒரே நாளில் 8,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்த 2 முறையும் குறைவான அளவிலேயே தென்காசி மாவட்டத்துக்கு தடுப்பூசிகள் வந்தன.

தென்காசி மாவட்டத்தில் இதுவரை சுமார் 1.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருநெல் வேலி மாவட்டத்தை விட தென்காசி மாவட்டத்துக்கு தடுப்பூசிகள் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. ஆனால், இந்த 2 மாவட்டங்களுக்கும் இடையே மக்கள்தொகையில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தை விட தென்காசி மாவட்டத்துக்கு குறைவான அளவிலேயே தடுப்பூசிகள் ஒதுக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யும் அளவுக்கு தென்காசி மாவட்டத்துக்கும் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE