காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவேன் என கூறிய கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை எரிக்கும் போராட்டம் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடப்பாறு ஆற்றங்கரையில் நேற்று நடைபெற்றது.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, அதன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். கோட்டூர் ஒன்றியச் செயலாளர் ராவணன், ஒன்றியத் தலைவர் வி.கே.வீரசேகர், துணைத் தலைவர் ரத்தினசாமி, பாலசுப்பிரமணியன், மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவலறிந்த கோட்டூர் போலீஸார் அங்கு சென்று, உருவபொம்மை எரிவதை அணைத்து, விவசாயிகளை கலைந்துபோகச் செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியது: காவிரியின் குறுக்கே அணை கட்டியே தீருவேன் எனக் கூறும் கர்நாடக முதல்வர் மீது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும். தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையமும் அணை கட்டுமானப் பணியை தடுக்க முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், ஆணையத்துக்கு எதிராகவும், அணை கட்டுமானப் பணியை தடுக்கவும் உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் வழக்கு தொடர்வோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago