50 சதவீத தொழிலாளர்களுடன் - பின்னலாடைத் தொழில் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் : முதல்வருக்கு ‘சைமா’ சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும்போது, 50 சதவீத தொழிலாளர்களுடன் பின்னலாடைத் தொழில் இயங்கலாம் என்ற அனுமதியை தமிழக முதல்வர் வழங்க வேண்டும் என சைமா சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) தலைவர் ஏ.சி.ஈஸ்வரன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் பின்னலாடைத் தொழிலைப் பொறுத்தவரையில் உள்நாட்டுக்கான உற்பத்தி தொழில், ஏற்றுமதி உற்பத்தி தொழில் என்று பிரித்துப் பார்க்க இயலாது என்பது நடைமுறை அனுபவம். ஏற்றுமதியோ, உள்நாட்டு உற்பத்தியோ- பின்னலாடைத் தொழில் என்றாலே நிட்டிங், டையிங், பிளீச்சிங், காம்பேக்டிங், கட்டிங், ஸ்டிச்சிங், செக்கிங், அயனிங், பேக்கிங் என்கிற அனைத்து பிரிவு பணிகளும் ஒரே மாதிரி பொதுவான பின்னலாடைகள் தயாரிக்க தேவையான வேலைகள்தான்.

இதில் வித்தியாசம் என்று பார்த்தால், ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவணியும், உள்நாட்டு உற்பத்தி மூலம் நம் மாநில, மத்திய அரசுகளுக்கான பொருளாதாரம் மேம்பாடு அடைவதும்தான். ஆகவே பின்னலாடைத் தொழில் ஏற்றுமதியும், உள்நாட்டு உற்பத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

அரசு அறிவிக்கும் வழிகாட்டும் நெறிமுறைகள்படி சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதும், தொற்று பரவாமல் பார்த்துக்கொள்வதிலும் ஏற்றுமதி உற்பத்தியாளர்கள், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அனைவரும் முழுமையாக பராமரிக்கும் அளவுக்கு அனுபவம் உள்ளவர்கள். எனவே உள்நாட்டு உற்பத்திக்கான தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவிப்பார் என்று, உற்பத்தியாளர்களும்- தொழிலாளர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். இந்த முறை ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும்போது, 50 சதவீத தொழிலாளர்களுடன் பின்னலாடைத் தொழில் இயங்கலாம் என்ற அனுமதியை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்