பிறந்த குழந்தை மர்மமான முறையில் மரணம்? : பல்லடம் போலீஸார் தீவிர விசாரணை

பல்லடம் அருகே பிறந்த குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததாக எழுந்த புகார் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாணிக்காபுரம் சாலை ஜேகேஜே காலனியைச் சேர்ந்தவர் சண்முகம் (40). லாரி ஓட்டுநர். இவரது மனைவி மும்தாஜ் (எ) தனலட்சுமி (35). உடுமலையை சேர்ந்தவர். இவர்களுக்கு இரண்டு மகள், ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், தனலட்சுமி மீண்டும் கர்ப்பம் தரித்தார். கடந்த 12-ம் தேதி பல்லடம் அரசு மருத்துவமனையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நஞ்சுக்கொடி சுற்றிய நிலையில் குழந்தை பிறந்ததாகவும், தனலட்சுமிக்கு உதிரப்போக்கு அதிகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பலவீனமாக இருந்த தனலட்சுமி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையுடன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு எந்தவித தகவலும் அளிக்காமல் குழந்தையுடன் அவர் சென்றுவிட்டதால், அப்பெண்ணின் வீட்டாரிடம் பல்லடம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் விசாரித்ததுடன், குழந்தையை கேட்டுள்ளனர்.

அதற்கு, குழந்தை இறந்துவிட்டதாகவும், காளிவேலம்பட்டி பிரிவு அருகே அடக்கம் செய்ததாகவும் கூறியுள்ளனர். இதுதொடர்பாக சந்தேகம் எழ, பல்லடம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பல்லடம் மருத்துவ அலுவலர் கூறும்போது, "கடந்த 12-ம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து, குழந்தையை உயிரோடுஎடுத்துக்கொண்டு தலைமறைவாகினர்.

அதன்பின்னர் விசாரித்தபோது, குழந்தை இயற்கையாக இறந்ததா அல்லது கொலை செய்யப்பட்டதா என்பது தொடர்பாக எந்தவித விசாரணைக்கும் ஒத்துழைக்காமல் இருக்கின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு சார்பிலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE