கும்மனூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவது குறித்து கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆறு செல்கிறது. கும்மனூர் மற்றும் ஆற்றின் மறுகரையில் உள்ள ஒம்பலக்கட்டு, அம்மனேரி, சவுளூர், வட்டக்கொல்லை, இலுப்பமரத்துக் கொட்டாய், புதூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தில் விவசாயிகள் 2 போகம் நெல் சாகுபடி செய்கின்றனர். அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகள் ஆற்றில் இறங்கி மறுகரைக்கு எடுத்து வரும் நிலை உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும் போது 15 கி.மீ தூரம் சுற்றி, விளைப் பொருட்களை கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் நேரம் விரயம், அதிக செலவு ஏற்படுகிறது.
எனவே, இங்கு தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே, விளைபொருட்கள் எடுத்துச் செல்லும் வகையில் பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் நேற்று தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம்கட்டுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறும்போது, நீண்ட காலமாக பாலம் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே இங்கு தரைப்பாலம் அல்லது மேம்பாலம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு, அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட உள்ளது.
விரைவில் இங்கு பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின் போது, ஒன்றியக்குழுத் தலைவர் அம்சாராஜன், இளநிலைப் பொறியாளர் செல்வம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago