ஆவடியில் வருவாய் தீர்வாய மனுக்கள் தொடர்பாகவும், திருவள்ளூரில் 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை நியாய விலைக் கடைகளுக்கு பிரித்து அனுப்பப்படுவதையும் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பரவல் காரணமாக 1430-ம்பசலிக்கான (2020-21) வருவாய் தீர்வாய மனுக்கள் கடந்த 10-ம் தேதி முதல், பொதுமக்களிடமிருந்து இணையவழி மற்றும் இ-சேவை மையம் மூலமாக பெறப்பட்டு வருகின்றன. அவ்வாறு பெறப்படும் மனுக்கள் அனைத்துக்கும் சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலர்கள் உரிய பதிலை அளிக்க வேண்டும் என ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்ட வருவாய் தீர்வாய மனுக்கள் தொடர்பாக நேற்று திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின்போது, ஆவடி வட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை விரைவாக பரிசீலித்து உரிய தீர்வு காண வேண்டும் என வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
பிறகு, திருவள்ளூர், லட்சுமிபுரம் தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவியாக வழங்கப்படும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை நியாய விலைக்கடைகளுக்கு பிரித்து அனுப்பப்படுவதை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விநியோகிப்பு முறை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, திருவள்ளூர், மா.பொ.சி. சாலையில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடையில் வழங்கப்படும் கரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரம், 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுப் பணிகளின் போது உதவி ஆட்சியர்(பயிற்சி) அனாமிகா ரமேஷ், ஆவடி வட்டாட்சியர் செல்வம், தனி வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஜெய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் காஜா சாகுல் ஹமீதுஉள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago